பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு 9 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்காக தேவையான ரூ. 9 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் சிட்டிசன்ஸ் டெவலப்மெண்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் தனியார் நிருவனத்தால் (Citizens Development Business Finance PLC) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (2021 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஆதரித்து, இலங்கை கடற்படையினர் 2021 மே 04 அன்று பூஸ்ஸ இலங்கை கடற்படை நிறுவன வளாகத்தில் ஒரே நேரத்தில் 200 நோயாளிகளுக்கு குடியிருப்பு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் மற்றும் 16 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு சிகிச்சை பிரிவு (HDU) கொண்ட மையமொன்று நிறுவியது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இலங்கை கடற்படையின் சமூகப் பணியை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் கடற்படைக்கு பல்வேறு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை நிலையத்திக்கு முழு வசதிகளுடன் கூடிய 50 படுக்கைகள், 10 சிறப்பு படுக்கைகள் (HDU type Bed) மற்றும் அந்த படுக்கைகளுக்காக ஒரு குழாய் ஆக்ஸிஜன் விநியோக அலகு (Gas system extension) மற்றும் 05 நோயாளி கண்காணிப்புகள் (Patient Monitors), உட்பட பல மருத்துவ உபகரணங்கள் அடையாளமாக சிட்டிசன்ஸ் டெவலப்மெண்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் தனியார் நிருவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மகேஷ் நாணயக்கார அவர்களால் இன்று (2021 நவம்பர் 05) கடற்படைத் தளபதியிடம் ஒப்படைக்கப்ட்டது. மேலும், கடற்படையின் மனிதவளத்தைப் பயன்படுத்தி, இடைநிலை சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுமையான தீவிர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் தனியார் நிருவனம் (CDB) நிதியுதவி அளித்துள்ளது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுக்காக கடற்படையில் COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான முதன்மை ஆலோசகர், ரியர் அட்மிரல் ஜி.எஸ்.ஆர். ஜயவர்தன, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே, பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், ரியர் அட்மிரல் சுஜீவ சேனவிரத்ன, கடற்படை துனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கொமடோர் பிஜேபி மாரபகே மற்றும் சிட்டிசன்ஸ் டெவலப்மெண்ட் பிசினஸ் ஃபினான்ஸ் தனியார் நிருவனத்தின் சில நபர்கள் கலந்து கொண்டனர்.