ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் மூலம் கடற்படைக்கு பல உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை இலகுவாகக் கண்டறியப் பயன்படுத்தப்படும் 04 கையடக்க பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே இயந்திரங்களை (Portable Backscatter X-ray Machine) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கையளிக்கும் நிகழ்வு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தலைவர் திரு. தோர்ஸ்டன் பார்க்ஃப்ரெட் (Thorsten Bargfrede - Deputy Head of Mission, EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் (United Nations Office on Drugs & Crime - UNODC) பிரதிநிதிகளின் தலைமையில் இன்று (2021 நவம்பர் 30) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடல் வழியாக நடைபெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், இலங்கை கடற்படையுடன் இணைந்து திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் சட்ட அமலாக்க முகவர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளதுடன் இந்த நோக்கத்திற்காக தேவைப்படும் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இது பங்களிக்கிறது மற்றும் உலகளாவிய போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதிலும் தொடர்ந்து பங்களிக்கிறது.

அதன்படி, உலகளாவிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் மற்றுமொரு நீட்சியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதில் கடற்படையின் திறமையான மற்றும் பயனுள்ள பங்கை மேலும் மேம்படுத்துதலுக்காக இந்த பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே இயந்திரம் (Portable Backscatter X-ray Machine) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் மூலம் இன்று (2021 நவம்பர் 30) கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த முயற்சிகளின் நீட்சியாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற மோசமான செயல்களை கட்டுப்படுத்தும் கடற்படையின் முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், 04 போர்ட்டபிள் பேக்ஸ்கேட்டர் எக்ஸ்ரே இயந்திரங்கள் இன்று (நவம்பர் 30) கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இலகுவாக மேற்கொள்ளக்கூடிய இந்த ஸ்கேனர்களின் பயன்பாடு எதிர்காலத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும்.

இந்நிகழ்வில் கடற்படையின் துனை பிரதானி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.