அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான பணியாளர் கலந்துரையாடல் மற்றும் கூட்டு கடல்சார் கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி நிறைவடைந்தது.

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் கடற்படை தலைமையகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி (03rd Navy to Navy Staff Talks SLN – USN) 2022 மார்ச் 23, அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது.

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கு இடையேயான பணியாளர்கள் பேச்சு வார்த்தைகள், பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க இரு கடற்படைகளுக்கு இடையே நட்பு, தொடர்பு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது. இதன்படி, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான தலைமையிலான இலங்கை கடற்படைத் தூதுக்குழு இந்நிகழ்வின் மூன்றாம் பதிப்பில் கலந்துகொண்டனர். அமெரிக்க ஏழாவது கப்பல் குழுவின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ரொபர்ட் டி. கிளார்க் (Deputy Commander, Seventh Fleet Rear Admiral Robert T. Clark) இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

அதன்படி, 2022 மார்ச் 22 ஆம் திகதி இலங்கை கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையில் இடம்பெற்ற பணியாளர்கள் பேச்சுவார்த்தையின் போது (03rd Navy to Navy Staff Talks SLN – USN) முந்தைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட கருப்பொருள்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த பின்னர் இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படைக்கு இடையிலான செயற்பாடுகள், பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை கடற்படையினரால் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் இரண்டாம் நாள் (2022 மார்ச் 23) இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கடற்படை குழு (US Pacific Fleet) மற்றும் ஐக்கிய அமெரிக்க பசுபிக் விமானப்படை (US Pacific Air Forces) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு கடல்சார் கலந்துரையாடல் (Joint Maritime Talks) இடம்பெற்றதுடன் அங்கு இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பு, இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்தின் செயல்பாடுகள், கடல்வழி போதைப்பொருள் கடத்தல், ஒருங்கிணைந்த கடல்சார் கொள்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார்வியல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டது.

இந்த கூட்டு கடல்சார் கலந்துரையாடலுக்காக கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான, இலங்கை விமானப்படையின் விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம். எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, அமெரிக்க ஏழாவது கப்பல் குழுவின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் றொபர்ட் டி. கிளார்க் மற்றும் ஐக்கிய அமெரிக்கா பசிபிக் விமானப்படையின் தேசிய விமான உதவியாளர் மேஜர் ஜெனரல் டேவிட் பி. பெர்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுக்காக கடற்படையின் 4 வது விரைவு தாக்குதல் ரோந்து படையணி உட்பட கடற்படையின் சிறப்புப் படையணிகளின் பயிற்சிகளுக்கு அமெரிக்க கடற்படையால் வழங்கப்படுகின்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக இங்கு கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான நன்றி தெரிவித்தார். கடல்சார் பங்குதாரர்களுக்கிடையிலான இத்தகைய கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் பொதுவான கடல்சார் சவால்களைக் கண்டறிய ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும்.