கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்தின் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்திற்கு (Information Fusion Centre - Colombo) கடல்சார் தகவல் சேகரிப்பு மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் (MDA Equipment) உத்தியோகபூர்வமாக கையளிப்பு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களின் தலைமையில் இன்று (2022 மார்ச் 25) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

இலங்கை 1340 கிலோ மீட்டர் கடற்கரையையும் 510,000 சதுர கிலோமீற்றர் கொண்ட தனித்துவமான பொருளாதார வலயத்தையும் கொண்டுள்ளது. இந்த கடற்கரை மற்றும் தனித்துவமான பொருளாதார வலயத்தின் பாதுகாப்பிற்கும், நிலப்பரப்பை விட 27 மடங்கு பெரிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்கும் இலங்கை பொறுப்பாக உள்ளது. இலங்கையின் தென் பகுதிக்கு அண்மித்த சர்வதேச கடல் பாதைகளில் அதிக எண்ணிக்கையிலான வணிகக் கப்பல்கள் பயணிப்பதால், அந்த கடல் பகுதியின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பொறுப்பும் இலங்கைக்கு உள்ளது.

அதன்படி, கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் தகவல் இணைவு மையம் (Information Fusion Centre - Colombo), கடல்சார் சூழலை தொடர்ந்து கண்காணித்து, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை விசாரிப்பதற்காக தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, தேவைப்படுபவர்களுக்கு வெளியிடுகிறது. ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன், போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC – GMCP) நன்கொடையாக வழங்கிய உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளிப்பு இன்று (25 மார்ச் 2022) இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், கடல்சார் தகவல் இணைவு மையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கடற்படைத் தளபதியின் தலைமையின் கீழ் கடல்சார் தகவல் இணைவு மையத்தில் நடைபெற்றதுடன் இந்த இணையத்தளத்துக்கு https://www.ifccolombo.org/ என்ற முகவரி மூலம் அணுகலாம்.

கடற்படை துனைத் தளபதி ரியர் அட்மிரல் வை.என்.ஜயரத்ன, செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான உடபட கடற்படைத் தலைமையகத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கப்டன் ஃபுகௌரா காகு (Capt Fukaura Gaku), போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பெர்னில்லே ராஸ்முசென் (Pernille Rasmussen) உட்பட பல அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.