கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் மற்றும் கலேவெல, இஹல திக்கல ஆரம்பக் கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2022 ஜூன் 02 ஆம் திகதி மற்றும் இன்று (2022 ஜூன் 03) பாடசாலை மாணவர்களின் மற்றும் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார அமைச்சின் அனுசரணையில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்போடு கடற்படையின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் கடற்படை இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிப்பதை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, 2022 மார்ச் 05 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலைய வளாகத்தின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 2022 ஜூன் 2 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த அவர்களின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அரந்தலாவ பிரதேசத்தில் உள்ள சுமார் 250 குடும்பங்களுக்கும், அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் வாழும் வணக்கத்திற்குரிய பிக்குகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும்.

மேலும், 2022 பெப்ரவரி மாதம் கலேவெல இஹல திக்கல ஆரம்பக் கல்லூரி வளாகத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2022 ஜூன் 03) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் இஹல திக்கல ஆரம்பப் பாடசாலையின் பிள்ளைகள் மற்றும் அப்பகுதியிலுள்ள சுமார் 300 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை இது மூலம் வழங்கப்படும்.