சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதியின் தலைமையில் சின்னங்கள் அணிவிக்கப்பட்டது

சிறப்பு படகுகள் படைப்பிரிவில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 29 ஆவது படைப்பிரிவின் மூன்று அதிகாரிகள் மற்றும் 19 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 ஜூன் 05) திருகோணமலை கடற்படைத் தளத்தில் வைத்து அவர்களின் சின்னங்களை வழங்கி வைத்தார்.

மிகவும் கடினமான சிறப்பு படகுகள் படைப்பிரிவு பயிற்சிக்காக தானாக முன்வந்து இணைந்து 29ஆவது ஆட்சேர்ப்புப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மூன்று அதிகாரிகள் மற்றும் 19 மாலுமிகளுக்கு பெருமைமிக்க சிறப்பு படகுகள் படைப்பிரிவு சின்னத்தை வழங்கிவைத்ததன் பின்னர், பயிற்சிக் காலத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு கடற்படைத் தளபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, சப் லெப்டினன்ட் ஏ.ஜி.ஆர்.எச்.என் அத்தபத்து மிகச் சிறந்த சிறப்பு படகுகள் படைப்பிரிவு உறுப்பினர், ஒட்டுமொத்த பாடங்களில் அதிக எண்ணிக்கை மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகளை வென்றார். இதற்கிடையில், சிறந்த துப்பாக்கி சுடும் வீரருக்கான விருதை கடற்படை வீரர் ஆர்.டி.திலான் பெற்றார். சிறந்த நீச்சல் வீரர் மற்றும் அதிக உடல் சகிப்புத்தன்மை கொண்ட சிறப்பு படகுகள் படைப்பிரிவு உறுப்பினருக்கான விருதுகளை முறையே கடற்படை வீரர் ஐ.ஜி.எல.சி குணரத்ன மற்றும் கடற்படை வீரர் கே.கே.ஏ.ன் தேசப்பிரிய ஆகியோர் வென்றனர்.

மேலும், சின்னம் வழங்கும் விழாவில் சிறப்பு படகுகள் படைப்பிரிவு பணியாளர்களின் போர் திறன்கள், திரட்டப்பட்ட வலிமை, நிபுணத்துவம் மற்றும் சண்டை திறன்களை மையமாகக் கொண்ட சிறப்பு பொழுதுபோக்கு கூறுகள் ஆகியவற்றின் நேரடி காட்சிகளும் இடம்பெற்றன. இந்த காட்சிக்கு இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்றும் இணைக்கப்பட்டது.

வட கடற்பரப்பில் ஆழமற்ற கடல் மற்றும் அதனுடன் இணைந்த நிலப்பகுதிகளில் எல்.டீ.டீ.ஈ பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுபதுத்துவதற்காக நீர் மற்றும் நிலப் பகுதியில் ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய ஒரு சிறப்பு ஆயுதப் பிரிவை நிறுவும் நோக்கில் 1993 ஆம் ஆண்டு கடற்படை சிறப்பு படகுகள் படைப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. சுமார் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து, கடற்படை முன்வரிசைப் படைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சிறப்பு படகுகள் படையணிவீரர்களை உரையாற்றிய கடற்படைத் தளபதி, தேசத்தின் இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, மூன்று தசாப்த கால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் பாராட்டுக்குரிய பங்களிப்பை வலியுறுத்தினார். மேலும், தேசத்தின் சுதந்திரத்திற்காக சிறப்பு படகுகள் படையணி வீரர்கள் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்தவர்கள் செய்த மிக உயர்ந்த தியாகத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். இன்று சின்னங்களை அணிந்திருக்கும் புதிதாக வரவழைக்கப்பட்ட சிறப்பு படகுகள் படையணி வீரர்கள் இந்த உயரடுக்கு படைகளுக்கு உள்ளார்ந்த நிபுணத்துவத்தை மேம்படுத்தி கடற்படையின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதியுடன் பணியாற்றுவார்கள் என கடற்படை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, தேசத்திற்கு சேவையாற்றுவதற்கு தமது பிள்ளைகளுக்கு சம்மதம் வழங்கிய பெற்றோருக்கு கடற்படைத் தளபதி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, நிதிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் திலக் சிகேரா, கடற்படை மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன, கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமன் பெரேரா, பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியாளர் ரியர் அட்மிரல் ரஞ்சன் மெதகொட, கொடி அதிகாரிகள், சிறப்பு படகுகள் படையணியின் கட்டளை அதிகாரி கப்டன் நிஸ்ஸங்க விக்ரமசிங்க உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், மாலுமிகள் மற்றும் சின்னங்களைப் பெற்றவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும், சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னர் 2022 ஜூன் 4 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரியின் இல்லத்தில் மற்றும் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வைத்து கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கடற்படைத் தளபதி உரையாற்றினார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு கடற்படையினரும் தேசிய பாதுகாப்புக்காக கடற்படையினரின் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த கட்டளைத் தளபதி, ஒவ்வொரு கடற்படையினரும் தமது கடமைகளை பொறுப்புடன் செய்ய வேண்டுமென கடற்படை எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தினார்.