இந்திய கடற்படைக் கப்பல் ‘INS Delhi’ தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 செப்டம்பர் 1 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல் ‘INS Delhi’ வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகுவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (2023 செப்டம்பர் 03) தீவை விட்டு வெளியேறியது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது (PASSEX), கப்பல்கள் வரிசையில் நகர்வது, கப்பல்களுக்கு இடையே செய்திப் பரிமாற்றம் போன்ற கடற்படைப் பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, கப்பல்களுக்கு இடையே பாரம்பரிய முறைப்படி வணக்கம் நடத்திய பிறகு குறித்த பயிற்சி நிறைவுற்றது.

மேலும், இலங்கை கடற்படையினருக்கு மற்றும் தேசிய கெடட் படையின் உறுப்பினர்களுக்கு ‘INS Delhi’ கப்பலின் செயல்பாட்டு செயல்திறனை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. ‘INS Delhi’ கப்பல் தீவில் தங்கியிருந்த போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவு மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ‘INS Delhi’ கப்பலின் கடற்படையினர் பங்கேற்றனர். அங்கு, கப்பலின் கடற்படையினர் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியிலும், இந்திய அமைதி காக்கும் பணியில் உயிரிழந்த இந்திய நாட்டவர்களின் நினைவாக பத்தரமுல்ல போர் வீரர்களின் நினைவிடத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், வெளிநாட்டு கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் இத்தகைய நட்புரீதியான பயணங்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன, மேலும் எதிர்காலத்தில் கப்பல்களின் வருகையுடன் இணைந்து நடத்தப்படும் கூட்டு கடற்படை பயிற்சிகள் மூலம் பரிமாறிக்கொள்ளப்படும் புதிய அறிவு மற்றும் அனுபவங்கள், கடல் பிராந்தியத்தின் பொதுவான சவால்களை கூட்டாக சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.