இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 33 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையே நடைபெற்ற 33வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் 2023 நவம்பர் 03 அன்று இந்திய கடற்படையின் INS Sumitra கப்பலில் காங்கசந்துராவிற்கு வடக்கே இந்திய-இலங்கை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இரு நாட்டு கடற்படைகள் மற்றும் கடலோர காவல் துறைகளுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்து, இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக ஆண்டுதோறும் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 33 ஆவது தடவையாக நடைபெற்ற இந்த சந்திப்பில் வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட தலைமையிலான இலங்கை கடற்படைக் குழு கலந்து கொண்டதுடன், இந்திய கடற்படைக் குழுவினர் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் தலைமையில் (Rear Admiral Ravi Kumar Dhingra – Flag Officer Commanding Tamil Nadu and Puducherry Naval Area) பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளின் கடல் எல்லைகளின் பாதுகாப்பு மற்றும் முந்தைய சர்வதேச கடல் எல்லை சந்திப்புகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான முன்னேற்றம், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் நிமல் ரணசிங்க, கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் கொமடோர் அருண வீரசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் (Captain Anand Mukundan) உட்பட இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.