அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இந்தோ-பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் மாநாடு-2023 இல் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு

கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய ஈடுபாட்டின் குறிப்பிடத்தக்க காட்சியாக, ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்பட்ட இந்தோ பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி (Indo Pacific International Maritime Exposition -2023) மற்றும் இந்தோ பசிபிக் கடல் சக்தி மாநாடு 2023 (Indo-Pacific Sea Power Conference - 2023) 2023 நவம்பர் 06 முதல் 09 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வெற்றிகரமாக நடைபெற்றன. உலகெங்கிலும் உள்ள கடற்படைத் தலைவர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் கடல்சார் தொழில் வல்லுநர்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் இந்த ஆண்டு கடற்படை பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற இந்தோ-பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி 2023 க்கு இணையாக ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் 'Fleet 2035: Sea Power and the Future of Maritime Warfare' என்ற கருப்பொருளின் கீழ் கடல்சார் ஆற்றல் மாநாடு நடத்தப்பட்டது. 46க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இதில் 19 கடற்படைத் தலைவர்கள் உட்பட 25 நாடுகளின் கடற்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். வங்காள விரிகுடா உட்பட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிக்கலான கடல்சார் சவால்களுக்கு வெற்றிகரமான மேலாண்மை மற்றும் கூட்டுப் பதிலளிப்பது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், கடல்சார் விண்வெளியில் நடத்தப்படும் மூலோபாய உரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பங்களிப்பதற்கும் பங்குதாரர்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வங்காள விரிகுடா பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு நிலைமை மற்றும் பங்களாதேஷ், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் இணைந்து பின்பற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் 'Bay of Bengal Round table' கலந்துரையாடல் ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹமட் நஸ்முல் ஹசன் (Admiral Mohammad Nazmul Hassan), இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் மாலைதீவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டனர். இங்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, வங்காள விரிகுடா பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டுப் பதிலின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்தார். மேலும், வளர்ந்து வரும் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்கள், அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய கடல்சார் சட்ட கட்டமைப்பிற்கு உள்ள சவால்கள் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதியைச் சுற்றியுள்ள கடலோர மாநிலங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கடற்படைத் தளபதி கருத்து தெரிவித்தார். ஒரு தீவு நாடாக கடலில் இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் அவர் இங்கு கருத்துக்கள் தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு இனையாக, பாகிஸ்தான் கடற்படைத் தலைவர் Admiral Naveed Ashraf, ராயல் கனடிய கடற்படைத் தளபதி Vice Admiral Angus Topshee, வங்காளதேச கடற்படைத் தலைமை அதிகாரி Admiral Mohammad Nazmul Hassan, அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படைத் தளபதி, Admiral Samuel J. Paparo (Commander, US Pacific Fleet), அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை கப்பல்களின் கட்டளை அதிகாரி, Vice Admiral Karl Thomas (Commander, Seventh Fleet, United States) மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதி, Rear Admiral Justin Jones,மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இடையே இருதரப்பு சந்திப்புகள் நடைபெற்றது. அங்கு வெளிநாட்டு கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

கடற்படைத் தளபதி, கடல்சார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய இராணுவ உற்பத்தித் துறையின் சமீபத்திய கண்காட்சிகளைப் பார்வையிட்டார். இந்தோ-பசிபிக் நாடுகளைச் சேர்ந்த பல கடற்படைத் தலைவர்கள் இந்தோ-பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி மற்றும் கடல் சக்தி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த பங்கேற்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகளை வளர்ப்பதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள பங்குதாரர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்கும்.