இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாய பயிற்சியை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையினரால்; அவசரகால இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயம் ஏற்படும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டுப் பயிற்சி 19 நவம்பர் 2024 அன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, மொன்டானா தேசிய காவல்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடலோர காவல்படை (மாவட்டம் 13) மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே நடந்து வரும் Subject Matter Expert Exchange - SMEE திட்டத்தில் பங்கேற்பாளர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டதுடன் இதற்காக, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, விமான நிலைய விமான சேவைகள் (இலங்கை), சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டது.

கோட்பாட்டு பயிற்சியின் போது, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அபாயங்கள் கண்டறிதல், அடையாளம் காணுதல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டதுடன், அதன் நடைமுறை அமர்வு தொடர்புடைய பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை முறையாக கையாளுதல், அவசரகாலத்தில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், அபாயகரமான இரசாயன சேர்மங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நுட்பங்களில் நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் இலங்கை கடற்படை இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அலகுகளை நிறுவியுள்ளதுடன் துறைமுக வளாகங்கள் மற்றும் கடல் பகுதிகளில் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசரநிலைகளை விரைவாகவும் துல்லியமாகவும் நிர்வகிப்பதற்கான தொழில்முறை முதல் பதிலளிப்பாளர்கள் மற்றும் நவீன உபகரணங்களுடன் இந்த அலகுகள் பொருத்தப்பட்டுள்ளன.