கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா 2025 மே 31 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் சந்திம சில்வாவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பாணதுறை ஸ்ரீ சுமங்கல கல்லூரியின் முன்னாள் மாணவரான ரியர் அட்மிரல் சந்திம சில்வா, 1991 ஆம் ஆண்டு ஜெனரல் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மாணவச் சிப்பாய் அதிகாரியாக இலங்கை கடற்படையின் நிர்வாகக் பிரிவில் சேர்ந்தார். ஜெனரல் சர் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1993 இல் சப்-லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டார். 1994 இல் பங்களாதேஷ் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் சப்-லெப்டினன்ட் தொழில்நுட்பப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தார், இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட நீருக்கடியில் போர் பயிற்சி பாடநெறியையும், சபுகஸ்கந்தாவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியையும் முடித்தார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தேசிய பாதுகாப்பில் முதுகலைப் பட்டத்தையும், களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப்தொடர்பில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2023 ஆகஸ்ட் 10 அன்று ரியர் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளர்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமானப் பணிக்கு தீவிரமாக பங்களித்ததோடு எதிரிக்கு எதிரான துணிச்சலான செயல்களுக்காக இரண்டு முறை ரணசுர பதக்கத்தை பெற்றுள்ள ரியர் அட்மிரல் சந்திம சில்வா, அவரது மதிப்புமிக்க சேவைக்காக மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இலங்கை கடற்படையில் பல்வேறு பதவிகளை வகித்த ரியர் அட்மிரல் சந்திம சில்வா, தனது சேவைக் காலத்தில், துரித தாக்குதல் ரோந்து கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும் துணை இயக்குநர் கடற்படை பயிற்சி, தளபதி மற்றும் கட்டளை அதிகாரி இலங்கை கடற்படை கப்பல் நிபுன, துணை இயக்குநர் கடற்படை நலன்புரி, கடற்படை ஆய்வுப் பிரிவின் இயக்குநர், வடக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி, கொடி அதிகாரி கடற்படை ஏவுகனை கட்டளை, தெற்கு கடற்படை கட்டளையின் கட்டளைத்தளபதி போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ள இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

மேலும், ரியர் அட்மிரல் சந்திம சில்வா, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக தனது கடமைகளைச் செய்யும் அதே வேளையில், கடற்படையின் துணைத் தலைமை பிரதானியாகவும் தனது கடமைகளைச் செய்வார்.