கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் புதிய துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில 2025 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினால் கடற்படைத் தலைமையகத்தில், ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலவிடம் நியமனக் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கி, 2025 செப்டெம்பர் 19 ஆம் திகதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, 1991 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் விநியோகம் மற்றும் சேவை பிரிவில் மாணவச் சிப்பாய் அதிகாரியாக தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். 1993 இல் துணை லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்ட அவர், 1995 இல் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியையும், 2007 இல் இந்திய கடற்படை கப்பல் ஹம்லாவில் விநியோகம் மற்றும் சேவைகள் பயிற்சி பாடசாலையில் விநியோக முகாமைத்துவ பாடநெறியையும் வெற்றிகரமாக முடித்தார். இந்தியாவின் கோவா பல்கலைக்கழகத்தில் விநியோக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், தனது பணிக்காலம் முழுவதும் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற பின்னர், 2024 ஜனவரி ரியர் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

தனது சிறப்பான சேவை, நிலையான தன்மை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா பதக்கத்தையும் பெற்ற ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, இலங்கை கடற்படையில் தனது 34 ஆண்டுகால சேவையில் விநியோகம் மற்றும் சேவைகள் (வடக்கு), கடற்படை விநியோகம் மற்றும் சேவைகள் இயக்குநர், கடற்படைத் தளபதியின் செயலாளர், கடற்படை செயலாளர் மற்றும் விநியோகம் மற்றும் சேவைகள் இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள இலங்கை கடற்படையின் ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.

மேலும், ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, விநியோகம் மற்றும் சேவைகள் இயக்குநர் ஜெனரலாக தனது கடமைகளைச் செய்யும் அதே வேளையில், கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாகவும் தனது கடமைகளைச் செய்வார்.