இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் பிரிவுகளின் ஆய்வு கடற்படைத் தலைமை அதிகாரியின் தலைமையில் வெலிசரவில் நடைபெற்றது

இலங்கை தன்னார்வ கடற்படையின் 2025 வருடாந்திர பயிற்சி முகாமின் முடிவைக் குறிக்கும் பிரிவுகளின் ஆய்வு மற்றும் அணிவகுப்பு இன்று (2025 அக்டோபர் 02) வெலிசரவில் உள்ள இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி கமாண்டர் அனுர கருணாரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

தன்னார்வ கடற்படையைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி முகாம் மற்றும் பிரிவுகளின் ஆய்வு, தன்னார்வ கடற்படைக்கு தனித்துவமான ஒரு பாரம்பரிய அம்சமாகும். 2025 செப்டம்பர் 15 அன்று தொடங்கிய இந்த ஆண்டு பயிற்சி முகாமில் 47 அதிகாரிகளும் 493 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகளும் பங்கேற்றனர்.

இந்த மூன்று வார பயிற்சி முகாமில், கடற்படையின் கடமைகளைச் செய்வதற்குத் தேவையான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பயிற்சித் திட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இன்று (2025 அக்டோபர் 02) கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படைத் தலைமை அதிகாரியினால், பாரம்பரியமான கடற்படைப் பிரிவுகளின் ஆய்வை மேற்கொண்டு, அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஒரு மரியாதை அணிவகுப்பு மற்றும் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியுடன், 2025 ஆண்டு பயிற்சி முகாமானது வெற்றிகரமாக நிறைவுப்பெற்றது.

இந்நிகழ்வில் பேசிய கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, 2025 ஆம் ஆண்டுக்கான தன்னார்வ கடற்படை வருடாந்திர பயிற்சி முகாமில் கடற்படைத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகக் கூறினார். மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த கடற்படைத் தலைமை அதிகாரி, தன்னார்வ கடற்படையின் வருடாந்திர பயிற்சி முகாம் மற்றும் பிரிவு ஆய்வு நீண்ட வரலாற்றைக் கொண்ட தன்னார்வ கடற்படையின் தனித்துவமான பாரம்பரியமாகும் என்றும், 24 அதிகாரிகள் மற்றும் 121 மாலுமிகளுடன் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படையாகத் தொடங்கிய தன்னார்வ கடற்படை, தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் தேவைகளுக்கு ஏற்ப 371 அதிகாரிகள் மற்றும் 10081 மாலுமிகளைக் கொண்ட ஒரு பெரிய மனிதவளமாக வளர்ந்துள்ளது என்றும், கடற்படையின் பங்களிப்பை நிறைவேற்ற பல்வேறு துறைகளில் தொழில்முறை பங்களிப்புகளைச் செய்து வருவதாகவும் கூறினார்.

அதேபோல், விளையாட்டு வெற்றிகளைப் பெறுவதன் மூலம் கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்க்க தன்னார்வ கடற்படை உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்பையும், பல்வேறு தொழில்களில் தன்னார்வ கடற்படை உறுப்பினர்கள் கடற்படைக்கு ஆற்றிய தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்பையும் தலைமை அதிகாரி பாராட்டினார்.

தன்னார்வ கடற்படையின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை நீண்ட பயணத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இறந்த அனைத்து தன்னார்வ கடற்படை வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார், மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நன்றிகளை செலுத்தினார்.

மேலும், கடற்படையின் துணைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் கலுபோவில, பணிப்பாளர் நாயகங்கள், கொடி அதிகாரிகள், கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் முன்னாள் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.