கடல்சார் மற்றும் கடலோரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதில் கடற்படை முன்னிலை வகிக்கிறது

கிழக்கு மாகாணத்தில் கடல்சார் மற்றும் கடலோரப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு கூட்டு அணுகுமுறை மூலம் தீர்வு காண தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான சிறப்பு கலந்துரையாடல், திருகோணமலை கடற்படை கப்பல்துறையில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் 2025 அக்டோபர் 02 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல் அழிவைத் தடுப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், கிழக்குக் கடலில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும் மாகாண அரசு நிறுவனங்கள் மற்றும் கடற்படை இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

மேலும், திருகோணமலை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்,கிழக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் காணி, வீதி அபிவிருத்தி, சுற்றுலா, சுகாதாரம், மின்சாரம், வனஜீவராசிகள், கடலோரப் பாதுகாப்பு, மீனவர் சங்கங்கள், தொல்பொருள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், நில அளவை, நீர் வழங்கல், பேரிடர் மேலாண்மை, திருகோணமலை வெடிபொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் காவல்துறை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்