கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் ஒரு வலுவான கூட்டுத் திட்டத்திற்காக கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவ சமூகம் இணைந்து செயல்படுகின்றது
வடமேற்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழலில் ஏற்படும் பாதகமான தாக்கம் மற்றும் கடல் வழிகளில் நடைபெறும் கடத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், மாகாணத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் வடமேற்கு மாகாண மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 அக்டோபர் 02 அன்று நடைபெற்றது.
அதன்படி, இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, நிலையான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், கடத்தல்காரர்களை கைப்பற்றுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வடமேற்கு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைப் புகாரளிப்பதற்கான தகவல் பகிர்வு பொறிமுறையை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு அணுகுமுறையை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ், அக் கட்டளையின் மூத்த அதிகாரிகள், முசலி பிரதேச செயலாளர் மற்றும் வனப் பாதுகாப்பு, நில அளவை, கலால், வனசீவராசிகள், வீதி அபிவிருத்தி, கடலோரப் பாதுகாப்பு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள், மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் மற்றும் மாகாணத்தின் மீன்பிடி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.