வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படை உதவுகிறது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக முழு தீவையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், நீர் வழங்கல் அமைப்புகள், மின்சார அமைப்புகள் மற்றும் பாதைகளை புணரமைத்தல், மருத்துவ சேவைகள், உலர் உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் ஆகியவற்றில் கடற்படையின் உதவியானது இன்று (2025 டிசம்பர் 02) வழங்கப்பட்டது.

அதன்படி, கண்டியின் லேவெல்ல பகுதியில் மகாவலி ஆற்றின் பாலத்தில் சிக்கிய மரக்கட்டைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுதல், கண்டியின் மொரகொல்ல பகுதியில் பாதையில் சரிந்த மண் மேடுகளை அகற்றுதல், கம்பஹா பகுதியில் பொது இடங்கள், வீடுகள் மற்றும் நீர் கிணறுகளை சுத்தம் செய்தல், நாத்தாண்டிய பகுதியில் மின்சார அமைப்பை புணரமைப்பதில் உதவி செய்தல் மற்றும் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீருக்கடியில் பராமரிப்பு பணிகளுக்கு சுழியோடி உதவி செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதுடன் கடுவெல, வெல்லம்பிட்டி, பியகம, கொத்மலை, கடான, கொட்டிக்காவத்த, முல்லேரியா மற்றும் மல்வானை பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை வழங்க கடற்படையின் பங்களிப்பு வழங்கப்பட்டது.