இலங்கை கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான ‘P628’, அமெரிக்காவின் ‘பால்டிமோர்’ இலிருந்து கொழும்பை நோக்கி புறப்பட்டது

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், 2025 டிசம்பரில் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான P 628, இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட பின்னர், 2026 பிப்ரவரி 20, அன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்திலிருந்து கொழும்புக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.

முன்னர் அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தை சேர்ந்த அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான ‘DECICIVE’, 2025 டிசம்பர் 02, அன்று இலங்கை கடற்படையிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட பின்னர், P628 என்ற (Pennant Number) இன் கீழ் இலங்கை கடற்படையில் இணைந்தது. இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்தவுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இலங்கை கடற்படையில் இணைந்த ‘B-Type Reliance Class 210-foot Cutter’ என்ற கப்பல் வகுப்பைச் சேர்ந்தத இந்தக் கப்பல், 64 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் ஒரே நேரத்தில் குறைந்தது 6000 கடல் மைல் தூரத்தை உள்ளடக்கிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டுள்ளது.

அதன்படி, ‘P628’ கப்பல், பால்டிமோரில் உள்ள அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் கட்டும் தளத்திலிருந்து, அட்லாண்டிக் பெருங்கடல், பனாமா கால்வாய், பசிபிக் பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடல் வழியாக சுமார் 14,775 கடல் மைல்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு, 2026 மே முதல் வாரத்தில் தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது இலங்கை கடற்படைக் கப்பலினால் மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், இலங்கை கடற்படைக் கப்பல் பனாமா கால்வாயைக் கடந்து சென்ற முதல் முறையாகவும் இது கருதப்படுகிறது. மேலும், இந்த நீண்ட பயணத்தின் போது, ‘P628’ கப்பல் விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு துறைமுகங்களுக்கு செல்லவுள்ளது, இதன் மூலம் அந்த நாடுகளுடன் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும், 'P628' என்ற இந்தக் கப்பலின் விநியோகம், கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை சமாளிக்க கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன், அமெரிக்க கடலோர காவல்படை திணைக்களத்தால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட நான்காவது (04) கப்பலாகும்.