நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல் தீவிலிருந்து புறப்பட்டது

2026 ஏப்ரல் 15 ஆம் திகதி நல்லெண்ணப் பயணமாக தீவிற்கு வந்த இந்தோனேசிய கடற்படையின் 'KRI BIMA SUCI - 945' என்ற பாய்மரக் கப்பல், தனது நல்லெண்ணப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இந்த நல்லெண்ணப் பயணத்தின் போது, ‘KRI BIMA SUCI - 945’ கப்பலின் கட்டளை அதிகாரியான கமாண்டர் SUGENG HARIYANTO, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் செயல்பாடுகளின் பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தினார். மேலும், 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளுக்கு இடையேயான (Navy Staff Talks – Sri Lanka Navy and Indonesian Navy) பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஒரு பூர்வாங்க கலந்துரையாடல், இரு நாடுகளின் கடற்படைப் பணியாளர்களின் பங்கேற்புடன் கொழும்பில் கடற்படை தளத்தில் நடைபெற்றது.

மேலும், இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படைப் வீர்ர்களுக்கு, 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பலை கண்காணிப்பு சுற்றுப்பயணத்தில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், ‘KRI BIMA SUCI - 945’ கப்பல் தீவில் தங்கியிருந்தபோது, இரு நாடுகளின் கடற்படைகளின் பங்கேற்புடன் நகர அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சி, நல்லெண்ணத்தை வளர்க்கும் வகையில் கைப்பந்துப் போட்டி, கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. அத்துடன், கப்பல் குழுவினர் கொழும்புப் பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதிலும் பங்கேற்றனர்.