சமூகத்தில் இருந்து போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய திட்டத்திற்கு இலங்கை கடற்படை வழங்கும் பங்களிப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டு

அரசின் கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு குடிமகனுக்கும் ‘மரியாதையான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு’ என்பதைக் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சியான ‘ரடம எகட’ தேசிய வேலைத்திட்டத்திற்கு முழுமையான வலுசேர்க்கும் அடிப்படையில், நாட்டை சூழ்ந்துள்ள போதைப்பொருள் அபாயத்தை சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க இலங்கை கடற்படை மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது செயற்பாட்டு பங்களிப்புக்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக, நாட்டின் எதிர்கால தலைமுறையை இந்த ஆபத்தான அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் உயரிய நோக்குடன், கடற்படை தமது அனைத்து வளங்களையும் மனிதவளத்தையும் திறம்பட முகாமைதத்துவம் செய்து , நாட்டை சுற்றியுள்ள கடல் எல்லைகளையும் நிலப்பரப்புகளையும் உள்ளடக்கிய விரிவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை வலையமைப்பை செயல்படுத்தி வருகிறது.

இந்த தேசிய பணியில் கடற்படை வழங்கும் ஒப்பற்ற பங்களிப்பை கண்காணித்து, அதனை புதிய பரிமாணத்தில் முன்னெடுக்க தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள் இன்று (ஏப்ரல் 21) அக்குரேகொடாவில் அமைந்துள்ள கடற்படை தலைமையகத்தின் விஷேட நடவடிக்கை மையத்தை பார்வையிட்டார்.

மேலும், தேசிய சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் கடற்படை உறுப்பினர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு அரசின் பாராட்டை தெரிவித்தலும் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதியமைச்சரை கடற்படை தளபதி பாரம்பரிய கடற்படை மரபுக்களுக்கமைய வரவேற்றதுடன், அவரை விஷேட நடவடிக்கை மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

‘ரடம எகட’ திட்டத்தின் கீழ் கடற்படை மேற்கொள்ளும் பணிகள், அதன் தற்போதைய முன்னேற்றம் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் நவீன உத்திகள் குறித்து இதன்போது கடற்படை தளபதி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் விரிவாக விளக்கமளித்தனர்.

தனது இந்த விஜயக்த்தின் இறுதியில் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், நாட்டை சுற்றியுள்ள கடல் எல்லைகளை உள்ளடக்கி கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் ஆற்றும் சேவையை உயர்ந்த முறையில் பாராட்டினார். தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கைகளை தொழில்நுட்ப மற்றும் மூலோபாய ரீதியாக மேலும் விரிவுபடுத்தவும், புதிய அணுகுமுறைகளின் மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

குறிப்பாக, போதைப்பொருளற்ற ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க கடற்படை மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பு முழு நாட்டின் மரியாதைக்கு உரியது என்பதை வலியுறுத்திய அவர், எதிர்காலத்திலும் இந்த தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் கடற்படை தலைமையகத்தின் கடற்படையின் பிரதம அதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஊடக ஆதரவு - www.defence.lk