தேசிய டெங்கு நுளம்புகள் ஒழிப்பு திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
நாட்டில் நிலவும் டெங்கு அபாயத்தைக் குறைக்கும் நோக்கிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், ‘க்ளீன் ஸ்ரீலங்கா” செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் ‘டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி’ தேசிய திட்டத்தில் இலங்கை கடற்படையும் இணைந்துள்ளது.
2026 ஜூலை 31 ஆம் திகதியுடன் இத்தொடரின் 27 ஆம் நாளை எட்டிய இந்நடவடிக்கையின் போது; சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த 83 கடற்படை வீரர்கள் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்கத் தங்களது பங்களிப்பை வழங்கினர். இதற்கமைய வத்தளை, ராகம, மஹர, பொரள்ளை, பாணந்துறை, நாரஹேன்பிட்ட, களனி, கம்பஹா மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் 2,412 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் அமைந்திருந்த 102 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் காணும் நோக்கில் அனைத்துக் கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி முறையான சுற்றாடல் பரிசோதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆபத்தான இடங்களை உடனடியாகத் தூய்மைப்படுத்துதல், கழிவுகளை அகற்றுதல் மற்றும் நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கடற்படை தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.













