இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சியிலிருந்து, கடற்படைப் பொறியியல் அதிகாரி ஒருவர் பட்டயப் பொறியியலாளராகத் தகுதி பெற்றார்
இலங்கை கடற்படையின் இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் பயிற்சி மூலம் தொழிற்தகுதிகளைப் பூர்த்தி செய்து, பட்டயக் கடல்சார் பொறியியலாளர் (Chartered Marine Engineer) தகுதியைப் பெற்றுக்கொண்ட முதல் அதிகாரி என்ற பெருமையை கடல்சார் பொறியாளர், லெப்டினன்ட் கொமாண்டர் தஹம் பொன்சேகா பெற்றுள்ளார்.
இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவின் (Directorate of Naval Design – DND) கீழ் பெற்ற தொழில்முறைப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இந்த வெற்றியினை ஈட்டியுள்ளதுடன், அவருக்குப் பட்டயப் பொறியியலாளர் தகுதியை வழங்கும் விழா 2026 ஜூலை மாதம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
இலங்கை பொறியியலாளர் நிறுவனம் (IESL) மூலம், கடற்படை வடிவமைப்பு மற்றும் கடல்சார் பொறியியலுக்கான அதிகாரம் பெற்ற பயிற்சி நிறுவனமாக இயக்குநர் கடற்படை வடிவமைப்புப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கடற்படைப் பொறியியல் அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
NAVSTRAT-2030 பார்வையின்படி, மனித வள மேம்பாடு, தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு இத்தகைய தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்கள் விதிவிலக்கான பங்களிப்பை வழங்குகின்றன.













