வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் கடற்படையின் வளப்பங்களிப்பில் மீனவ சமூகத்திற்கு முதலுதவி பயிற்சித் திட்டம்
இலங்கை கடற்படை, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் மீன்பிடி நீரியல் வளங்கள் திணைக்களம் இணைந்து நடத்தும் மீனவர் சமூகத்தை வலுப்படுத்தும் முதலுதவிப் பயிற்சித் தொடரின் ஒரு அங்கமாக, கிழக்கு கடற்படை கட்டளையின் வளப்பங்களிப்பில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டம் 2026 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மீனவர் சமூகத்தின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியின் மேற்பார்வையில், அக்கட்டளையின் மருத்துவப் பணியாளர்களின் வளப்பங்களிப்புடனும், வாழைச்சேனை உதவி மீன்பிடிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமைத்துவத்தின் ஏற்பாட்டுப் பங்களிப்புடனும் இந்த முதலுதவிப் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது.
இதற்கமைய, Basic Life Support முறைகள், மனநல நல்வாழ்வு அத்துடன் கடலில் தொழில்புரியும்போது மீனவர் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காகக் கரைக்கு வரும் வரை அல்லது மருத்துவ உதவி கிடைக்கும் வரை நோயாளிக்கு முதலுதவி அளிப்பது மற்றும் அச்சூழ்நிலையைக் கையாளுவது குறித்தும் தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் மீனவர் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டப்பட்டதுடன், இதில் கலந்துகொண்ட மீனவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.













