கடற்படைத் தளபதி கடற்படையினருக்கு உரையாற்றுகையில், கடற்படையின் எதிர்கால முன்னுரிமைகளை வலியுறுத்தினார்
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்றைய தினம் (2026 ஜூலை 07) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை வீரர்களுக்கு காணொளிக் கருத்தரங்கம் மூலம் உரையாற்றினார்.
இதன்போது, கடற்படையின் எதிர்காலப் பணிகளை வழிநடத்தும் மூன்று முக்கிய முன்னுரிமைகள் குறித்து கடற்படைத் தளபதி வலியுறுத்தினார். அதற்கமைய, முதலாவது முன்னுரிமையாக உயர் தொழில்சார் திறன் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் தயார்நிலை (Operational Readiness) கொண்ட கடற்படையைக் கட்டியெழுப்புதல், இரண்டாவது முன்னுரிமையாக திறமையான, பொறுப்புக்கூறத்தக்க மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவு, புத்தாக்கங்களுடன் முன்னோக்கிச் செல்லும் நிறுவனமொன்றைக் கட்டியெழுப்புதல் மற்றும் மூன்றாவது முன்னுரிமையாக கடற்படை வீரர்களினதும் ஒட்டுமொத்த கடற்படைச் சமூகத்தினதும் நலன்புரி, முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தலை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, தலைமைத்தும் குறித்து கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, விசுவாசம் என்பது தனிநபர்கள் மீதான விசுவாசம் அல்ல, மாறாக உண்மை, நீதி மற்றும் நிறுவனத்தின் நல்வாழ்வு ஆகியவற்றின் மீதான தளராத அர்ப்பணிப்பாகும் என மேலும் குறிப்பிட்டார். நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் அமையாது, இலங்கை கடற்படையினதும் நாட்டினதும் பொதுவான நன்மையைக் கருத்திற் கொண்டே எடுக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கொள்கைப்பூர்வமான தீர்மானங்களை எடுக்கும் கலாச்சாரத்தின் ஊடாக நம்பகமான, நியாயமான மற்றும் பலமிக்க கடற்படையைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
இதன்போது, இந்த முன்னுரிமைகளை அடைந்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கடற்படைத் தளபதி, சேவை மீதான விசுவாசம், தொழில்சார் திறமை மற்றும் சவால்களுக்கு மத்தியில் தளராது செயல்படும் திறன் ஆகியன கடற்படை வீரர்கள் கொண்டிருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளாகும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், கடற்படையின் முன்னேற்றத்திற்காகப் பங்களிப்பு வழங்கி, மிக உயர்ந்த தொழில்சார் தரங்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அனைத்து கடற்படை வீரர்களிடமும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய கடற்படையைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் கடற்படை வீரர்களின் உன்னதமான சேவை மற்றும் தியாகங்களையும் கடற்படைத் தளபதி இதன்போது பாராட்டி மதிப்பீடு செய்தார்.
இந்த நிகழ்வை கடற்படைத் தலைமையகம் உட்பட அனைத்து கடற்படைக் கட்டளைகளையும் சேர்ந்த கடற்படையினரும் சிவில் ஊழியர்களும் காணொளிக் கருத்தரங்கம் ஊடாகப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.













