Hiking Team Challenge 2026 போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது
Trekker Adventure Academy (Pvt) Ltd நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Hiking Team Challenge 2026 போட்டியானது, 2026 ஜூலை 24 முதல் 26 வரை பூநாகலை மலைப் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய இலங்கை கடற்படையின் சாகச மற்றும் இயற்கை விளையாட்டுப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணிகளில், 'Poseidon' அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், 'Sea Adventure' அணி இரண்டாம் இடத்தையும் வென்று சாதனை படைத்தன.
Poseidon, Sea Adventure, Air Warriorz மற்றும் Highland Wolves ஆகிய நான்கு அணிகளின் பங்கேற்புடன் மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டித் தொடர், இயற்கை அழகும் சவாலான நிலப்பரப்பும் நிறைந்த பூநாகலை மலைப்பகுதியின் பல கடினமான வழிகளை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டியாளர்களின் தலைமைத்துவம், குழு உணர்வு, சகிப்புத்தன்மை, உடற்தகுதி, வழியறியும் திறன் (Navigation), முதலுதவி, பொது அறிவு மற்றும் சவாலான சூழ்நிலைகளில் விரைவான மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் திறன்கள் ஆகியவை இங்கு விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டன.
அங்கு, கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற லெப்டினன்ட் கமாண்டர் யொவுன் சங்கல்பன, போட்டி முழுவதிலும் காட்டிய சிறந்த வழிகாட்டும் திறன் மற்றும் சிறந்த வழி கண்டறிதல் திட்டமிடலுக்காக 'சிறந்த வழி கண்டறிபவர்' (Best Navigator) கோப்பையை வென்றார். மேலும், லெப்டினன்ட் கமாண்டர் திலின வீரசிங்க, சவாலான சூழ்நிலைகளில் தனது அணியை வெற்றிகரமாக வழிநடத்தியமை, ஒருங்கிணைத்தமை மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்கியமைக்காக 'சிறந்த அணித் தலைவர்' (Best Team Leader) கோப்பையை வென்றார்.
இலங்கை கடற்படையினர் ஈட்டியுள்ள இவ்வொப்பற்ற வெற்றியானது, சவால்கள் நிறைந்த சாகச விளையாட்டுத் துறையில் அவர்களின் சிறந்த தொழிற்திறன், கட்டுப்பாடு, குழு உணர்வு மற்றும் வலுவான தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை தேசிய மட்டத்தில் பறைசாற்றியுள்ளது. அத்துடன், எத்தகைய கடினமான சூழலிலும் முறையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் மனவுறுதியுடன் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் இலங்கை கடற்படையின் இணையற்ற ஆற்றலையும் வெற்றித் திறனையும் இது தெளிவாகப் புலப்படுத்துகிறது.













