EVENT NEWS › 2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இன் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் இலங்கை கடற்படை முதலிடத்தைப் பிடித்துள்ளது

08 Nov 2026

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 இல் அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை கடற்படை, தேசிய உற்பத்தித்திறன் விருதினை வெற்றிப்பெற்றுள்ளது. கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (2026 நவம்பர் 08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில், குறித்த உற்பத்தித்திறன் விருதினை கௌரவ ஜனாதிபதி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களிடம் வழங்கி வைத்தார்.

தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியானது, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டமாகும். ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இப்போட்டியின் ஊடாக, அரசாங்கத் துறை, தனியார் துறை, பாடசாலைகள் மற்றும் நுண்ணளவிலான தொழில்முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்படும் சிறந்த செயல்திறன், வினைத்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, நாடளாவிய ரீதியில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி, கப்பல் கட்டும் தளத்தின் கொமடோர் கண்காணிப்பாளர் அலுவலகம் (கிழக்கு), நீல ஹரித வேலைத் திட்டம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு, இயந்திரப் பரிசோதனைப் பிரிவு மற்றும் கடற்படை படகுகள் நிர்மாணத் தளம் ஆகிய ஆறு (06) நிறுவனங்கள் மற்றும் பிரிவுகள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றன.

இந்தப் பிரிவுகள் உயர் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனுடன் செயற்படுவதற்காக வழங்கப்பட்ட சிறந்த தலைமைத்துவம், சேவைப் பெறுநர்களின் கருத்துக்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய நோக்கு, மனிதவள முகாமைத்துவம், செயன்முறைகள் மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனத்தின் பெறுபேறுகள் மற்றும் பயன்தரு புத்தாக்கத் திட்டங்கள் ஆகியன இந்த உற்பத்தித்திறன் விருதுகளை வழங்குவதற்கான பிரதான மதிப்பீட்டு அளவுகோல்களாக அமைந்தன. மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுச் செயன்முறையில், அரசாங்கத் துறைகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையிலான பிரிவில் முதல் இடங்களைப் பெற்ற நான்கு (04) நிறுவனங்களுள் ஒன்றாக இடம்பெற முடிந்தமை, இலங்கை கடற்படை ஈட்டிய ஒரு தனித்துவமான சாதனை மட்டுமன்றி, அதன் பெருமைமிக்க பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இந்நிகழ்வில் பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹசந்த திசாநாயக்க மற்றும் கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜயந்த பண்டார ஆகிய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில் பங்கேற்ற நிறுவனங்கள் மற்றும் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி சார்பில் அதன் தளபதி கொமடோர் நலிந்த திசாநாயக்க, கடற்படை படகுகள் நிர்மாணத் தளத்தின் சார்பில் அதன் முகாமையாளர் கமாண்டர் அருணோத சமரநாயக்க, நீல ஹரித வேலைத் திட்டத்தின் சார்பில் கமாண்டர் கிஹான் பிரேமதிலக்க, இயந்திரப் பரிசோதனைப் பிரிவின் சார்பில் லெப்டினன்ட் கமாண்டர் சரத் ஜயசிங்க, கொமடோர் கண்காணிப்பாளர் கப்பல் கட்டும் தளம் (கிழக்கு) சார்பில் லெப்டினன்ட் கமாண்டர் ஹசித தில்ஷான் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் சார்பில் லெப்டினன்ட் கமாண்டர் சாமர குருவிட்ட பண்டார ஆகிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools