EVENT NEWS › 2026

திருகோணமலை கடற்படை கப்பல்தளத்தில் மேம்படுத்தப்பட்ட நலன்புரி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திறந்து வைப்பு

31 Oct 2026

கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், திருகோணமலை இலங்கை கடற்படை கப்பல்தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறிய திரையரங்கம் (Mini Theatre) மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கோரல் கோவ் கடற்கரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட யோகா பயிற்சிக் கூடம் ஆகியவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படைத் தளபதியினால் இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட புதிய சிறிய திரையரங்கமானது, கடற்படை கப்பல்தளத்தில் ஏற்கனவே காணப்பட்ட கட்டடம் ஒன்றை, குளிரூட்டப்பட்ட வசதிகளுடனும் ஒரே நேரத்தில் அறுபது (60) பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகளுடனும் நவீனமயப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். அத்துடன், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்குச் சொந்தமான கோரல் கோவ் கடற்கரையில் அமைந்திருந்த யோகா பயிற்சிக் கூடம் நவீனமயப்படுத்தப்பட்டு, புதிய யோகா பயிற்சிக் கூடமாகத் திறந்து வைக்கப்பட்டது. மேலும், புதிய யோகா பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட யோகா பயிற்சி நிகழ்வையும் கடற்படைத் தளபதி பார்வையிட்டார். இதன்போது, அப்பயிற்சியில் பங்கேற்ற கடற்படைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் சிறு உரையொன்றையும் நிகழ்த்தினார்.

மேலும், இலங்கை கடற்படை கப்பல்தளத்தின் கட்டளை அதிகாரியான கெப்டன் சமன் ரத்நாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைய, கப்பல்தள வளாகத்தினுள் ‘கலா அரண’ (ND Art Corner), உணவகம் (ND Cafe), பழச்சாறு விற்பனை நிலையம் (Juice Bar) மற்றும் சலவை வசதிக் கட்டிடம் (Dockyard Laundry) ஆகியன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறிய திரையரங்கிற்கு அருகில் அமைந்துள்ள ‘ND Art Corner’ வளாகத்தினை பார்வையிடுவதற்காகக் கடற்படைத் தளபதி விஜயம் செய்தார். இதன்போது, குறித்த வளாகத்தில் கடற்படை வீரர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்களிலிருந்து சிறந்த ஓவியங்களாகத் தெரிவு செய்யப்பட்ட படைப்புகளின் படைப்பாளர்களுக்குக் கடற்படைத் தளபதி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கடற்படையின் பிரதி பிரதானியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் சமிந்த குணரத்ன, கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் நளிந்த திசாநாயக்க உள்ளிட்ட கொடி அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல்தளத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் சமன் ரத்நாயக்க மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools