சீற்றமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிலையில்
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜெயசுந்தர கிராமத்தில் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் உட்பட 11 நபர்களை இலங்கை கடற்படையின் பேரிடர் நிவாரணக் குழுவினர் இன்று (2026 ஆகஸ்ட் 03) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படை 21 பேரிடர் நிவாரணக் குழுக்களையும் படகுகளையும் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளது.
மேலும், வெள்ளப்பெருக்கு மற்றும் திடீர் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும், தேவையான நிவாரணப் பணிகளை விரைவாக முன்னெடுப்பதற்கும் ஏரத்தால 700 கடற்படை வீரர்களைக் கொண்ட (171) பேரிடர் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு வசதிகளை விரைவாக வழங்குவதற்காக இலங்கை கடற்படையின் 04 நடமாடும் சமையலறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவைக்கேற்ப உடனடியாக உணவு வழங்குவதற்காக அந்த சமையலறைகளை அனுப்புவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையானது, பேரிடர் முகாமைத்துவ மையம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அவசர கால சூழ்நிலைகளுக்கு விரைவாகச் செயல்படுவதற்கும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதுடன், தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முழுத் தயார் நிலையில் செயற்பட்டு வருகின்றது.













