கிழக்குக் கடற்பரப்பில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு அழைத்து வந்து, சிகிச்சைக்காக அனுப்பி வைக்க கடற்படையினர் உதவி

06 Nov 2026

திருகோணமலைக்கு அப்பால் கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை பலநாள் மீன்பிடிப் படகொன்றின் மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து மீட்கப்பட்ட பின்னர், ஆபத்தான உடல்நிலைக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து, கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினர் இன்று (2026 நவம்பர் 06) துரிதமாகச் செயற்பட்டு, குறித்த மீனவரை கரைக்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2026 ஒக்டோபர் 29ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற ‘கிஷான் புத்தா’ (IMUL-A-0831 TLE) எனும் பலநாள் மீன்பிடிப் படகு, திருகோணமலை பொல்டர் முனையிலிருந்து சுமார் 54 கடல் மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகில் இருந்த மீனவர் ஒருவர் திடீரென கடலில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, குறித்த மீனவருக்கு ஏற்பட்ட உடல்நலச் சிக்கல்கள் காரணமாக, அவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவியை வழங்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவித்தது. அதற்கமைய, குறித்த மீனவரை கரைக்கு அழைத்து வருவதற்காக கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இணைக்கப்பட்டுள்ள P 474 அதிவேக தாக்குதல் படகை அனுப்பி வைக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, நோய்வாய்ப்பட்ட குறித்த மீனவரை கடற்படை படகில் ஏற்றிக்கொண்ட பின்னர், அவருக்கு ஆரம்பகட்ட முதலுதவி சிகிச்சைகளை வழங்கி, துரிதமாக திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்திற்குள் ஆபத்துக்குள்ளாகும் கடற்பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

Accessibility Tools