சுண்டிகுளம் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது 4 பேர் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால் 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுண்டிகுளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) சந்தேகநபர்கள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்துகும் (1,900) அதிகமான கிலோகிராம் மீன் தொகையும் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட நபர்கள் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் மீன் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.













